மத்திய பிரதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிர்கர் கோட்டையை சுற்றிலும் கிராம மக்கள் தங்க புதையல் வேட்டையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனின் டார்ச் வெளிச்சத்தில் கோட்டையைச் சுற்றி குழிகள் தோண்டி புதையல் தேடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சமீபத்தில், நடிகர் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா, அக்ஷய் கன்னா நடித்த சாவா Chhaava என்ற திரைப்படம் வெளியானது. லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இந்த திரைப்படம், இந்து ராஜ்ஜியம் கண்ட சத்ரபதி சிவாஜியின் புதல்வர் சாம்பாஜி பேரரசரின் வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாகும்.
சிவாஜி சாவந்தின் புகழ்பெற்ற மராத்தி நாவலான சாவாவை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜிக்குப் பின் மராட்டியப் பேரரசின் இரண்டாவது மாமன்னராக சாம்பாஜி ஆட்சி செய்து வந்தார்.
மத்திய பிரதேசத்தில், புர்ஹான்பூர் மாவட்டத்தில், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆசிர்கர் கோட்டை உள்ளது. இந்த பழங்கால கோட்டை சாவா திரைப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிர்கர் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது முகலாய பேரரசர் அக்பருடன் தொடர்புடைய கோட்டையாகும். மராட்டியர்களுக்கு எதிரான படையெடுப்புகளின்போது, முகலாயர்கள் கொள்ளையடித்த தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க ரத்தினங்கள் ஆசிர்கர் கோட்டையை சுற்றிலும் மண்ணுக்குள் இருப்பதாக புனைகதைகள் உள்ளன.
இந்நிலையில், ஆசிர் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில், தங்க நாணயங்கள் உள்ளிட்ட புதையல்கள் இருப்பதாக வதந்தி பரவியது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பிய கிராம மக்கள், கோட்டையைச் சுற்றியுள்ள பகுதியில் புதையலைத் தேடி குழிகள் தோண்டினார்கள். இரவு 7 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3 மணி வரை கிராம மக்கள் கோட்டையைச் சுற்றி புதையல் தேடியுள்ளனர்.
இந்த புதையல் வேட்டை சம்பவம் குறித்து பத்திரிகையாளர் காஷிஃப் காக்வி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இரண்டு லட்சத்துக்கும் அதிகமான VIEWS வை பெற்ற இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலானது. இந்த வீடியோவுக்கு கேலி, கிண்டல் முதல் அவநம்பிக்கை வரை விதவிதமான விமர்சனங்களும் வந்தன.
இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,கோட்டையைச் சுற்றி குழிகள் தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், புர்ஹான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதியில் தங்க நாணயங்கள் அல்லது புதையல் கண்டுபிடிக்கப் பட்டால் அவை அரசுக்கு சொந்தமானதாக கருதப்படும் என்றும் கூறியுள்ளார்.