காரியாபட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை தார் உலையில் வீசி கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில் 40 நாட்களுக்கு பின் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மேல அழகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவர் ராணுவத்திலும், ரயில்வேயிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், திடீரென மாயமானார்.
இது தொடர்பாக அவரது மனைவி மலர்விழி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், துரைப்பாண்டி வங்கி கணக்கில் இருந்து ராம்குமார் என்பவரது வங்கிக் கணக்கிற்கு அதிக அளவு பணம் அனுப்பியது தெரியவந்தது.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், தார் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றிய வந்த பாண்டி என்பவர் மூலம் துரைபாண்டிக்கு ராம்குமார் அறிமுகமானது தெரியவந்தது.
மேலும், மூவரும் நட்பாக பழகி வந்த நிலையில், கார் வாங்கி தந்ததில் இருவரும் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் பெற்றதை அறிந்த துரைபாண்டி அதுகுறித்து கேட்டதால், ஆத்திரமடைந்த இருவரும் துரைபாண்டியை கொலை செய்து தார் உலையில் வீசி எரிந்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இதனை தொடர்ந்து இருவரை கைது செய்த போலீசார், தார் உலையில் கிடைத்த சில எலும்புகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.