திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், பழமையான ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வெளிநாடுகளிலும் புத்தக கண்காட்சி நடத்த 2 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,
கணினி தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி, ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் கூறினார்.
இலக்கியங்களை மொழிபெயர்க்க முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அகழ்வாராய்ச்சிக்கு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகை வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்க 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 கோடி ரூபாய் செலவில் நாவாய் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 40 கோடி ரூபாய் நிதியில் சிந்துவெளி பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழிப்பெயர்க்க ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.