நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டத்தில் மானியம் வழங்க 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
உழவர்களை தேடி வேளாண்மைத்துறை என்ற திட்டம் தொடர்பாக மாதம் இரு கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறினார்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இயற்கை மரணத்திற்கான நிதியுதவி 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2 ஆயிரத்து 338 கிராம ஊராட்சிகளில் 269 கோடி ரூபாய் மதிப்பில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், 40 கோடி ரூபாய் மதிப்பில் மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
நிலக்கடலை, எள், ஆமணக்கு உற்பத்தி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
நவீன வேளாண் கருவிகள், சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டறிந்து செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.