கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர், 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்துடன் காய்கறிகள் விதை தொகுப்பு வழங்கப்படும் என்றும், 9 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் பழச்செடி தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பயிர்வகை விதை தொகுப்பு ஒரு லட்சம் இல்லங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் எனவும் கூறினார். புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்றும், வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்க 18 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
நடப்பாண்டில் மூன்றாயிரம் ஏக்கரில் மல்லிகை சாகுபடியை ஊக்குவிக்க ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.