ஒரு மொழியை திணிப்பதும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியை ஒருபோதும் தான் எதிர்க்கவில்லை எனவும் ஆனால் அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கை இந்தியை கட்டாயமாக்கவில்லை என்ற நிலையில், அதைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவது, மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் எனவும் பவன் கல்யாண் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு இந்தியாவின் மொழிப்பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்திரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் ஜனசேனா கட்சி உறுதியாக உள்ளது எனவும் பவன் கல்யாண் கூறியுள்ளார்.