வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் பணிகள் தொடர்பாக, ஆதார் மற்றும் தேர்தல் ஆணைய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள இருவேறு வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்கள், ஒரே மாதிரி இருப்பதாகவும், இது போலி வாக்காளர்கள் அதிகரிப்பதை உணர்த்துவதாகவும் அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர், ஆதார் தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 326-ன் படி இந்திய குடிமக்களுக்கு தேர்தலில் ஒருமுறை மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ள நிலையில், போலி வாக்களர்களை தடுக்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் முக்கியத்துவம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக ஆதார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.