மதுரையில் தனிப்படை காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். இவர் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் கலையரசன் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார், உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் எரித்ததற்கான தடயம் இல்லாத நிலையில், வேறு இடத்தில் கொலை செய்து எரித்துவிட்டு உடலை ஈச்சனேரி பகுதியில் வீசிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலையரசன் சிறந்த காவலருக்கான சான்றிதழ் பெற்ற நிலையில், முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கலையரசனின் உறவினர்கள் ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேட்டியளித்த உறவினர்கள், தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை எனவும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
அதே இடத்தில் கடந்த 4-ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நிலையில், அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.