சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாகச் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
பேரவையில் உரையாற்றிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சமூக நீதியின் ஒரு அங்கம் எனவும், தெலங்கானாவில் கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் மாநில அரசுக்குத் தடையில்லை என்பது தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டினார். படிப்பு, வேலை வாய்ப்பில் சாதி பார்க்கும் போது சாதியை எப்படி ஒழிக்க முடியும்? எனவும் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் மெய்ய நாதன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளதாகக் கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனப் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.
அமைச்சரின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாகக் கூறினார். முதலில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் எனவும், பின்னர் நீதிமன்றம் தடை விதித்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து உரையாற்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பணி எனக் குறிப்பிட்டார். எனவே சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்துவதே சரியாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
மீண்டும் உரையாற்றிய பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் கேள்வி வந்தால் என்ன செய்வது? என வினவினார். அதற்காகவாவது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.