சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குப் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், நக்சலைட்டுகள் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்படுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதியிலிருந்து பெருமளவிலான ஏ.கே. 47 துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர், பி.ஜி.எல். லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே நக்சல்கள் கொல்லப்பட்டது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் 31 மார்ச் 2026 ஆம் ஆண்டுக்கு முன் நக்சலிசத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆயுதங்களும் வன்முறையும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது எனவும், அமைதியும் வளர்ச்சியும் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.