கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி மாதத்தின் பரணி நட்சத்திரத்தில் தூக்க நேர்ச்சை திருவிழா நடைபெறுவது வழக்கம். குழந்தை வரம் வேண்டியும், பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கவும் வேண்டி தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தூக்க நேர்ச்சை விழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்நிலையில், 10-ம் நாள் திருவிழாவான இன்று பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை, பக்தர்களின் சரண கோஷத்துக்கிடையே கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேர்ச்சைக்கு கொடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தைகளை தூக்கக்காரர்கள் கையில் ஏந்தி அந்தரத்தில் தொங்கியபடி கோயிலை வலம் வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க செய்தது.
இந்த ஆண்டு ஆயிரத்து 166 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ள நிலையில், நாளை காலை வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.