திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வரும் நிலையில், தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாகக் கொள்முதல் செய்து ஆடைகளைத் தயாரித்து வருகின்றனர்.
நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளன. அதில், நூல் விலை கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரக நூல்களுக்கும் 3 ரூபாய் விலை உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நூல் விலை ஏற்றமின்றி சீராகக் காணப்பட்ட நிலையில், திடீரென விலை உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.