காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொளத்தூரைச் சேர்ந்த செல்லப்பன் என்பவரின் மகள் விக்னேஸ்வரியும், புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபன் என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விக்னேஷ்வரி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததாகப் பெற்றோருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் உடலை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விக்னேஷ்வரி, தலையில் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
விக்னேஸ்வரியும், தீபனும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காதலன் தீபனும் காணாமல் போனதால், அவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.