மத்தியப்பிரதேசம் அருகே கிணற்றைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
கந்த்வா மாவட்டம், சாய்கான் மகான் பகுதியில் உள்ள கங்கௌர் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வளாகத்தில் உள்ள கிணற்றைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் கிணற்றில் இறங்கிய தொழிலாளி சேற்றில் சிக்கிக் கொண்டதால், அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 7 தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கிணற்றில் இறங்கியுள்ளனர்.
கிணற்றில் விஷவாயு தாக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 பேரும் மயங்கியுள்ளனர். இது குறித்துத் தகவலறிந்த வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் இருந்த 8 பேரையும் சடலமாக மீட்டனர்.
8 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விஷவாயு தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வழங்க மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.