ஐபிஎல் தொடரில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி, பஞ்சாபில் உள்ள மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 42 பந்துகளில் 103 ரன்களை விளாசினார்.
மற்றொரு வீரரான சஷாங்க் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். சென்னை அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய சென்னை அணி, தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி வீரர்கள், சென்னை அணியின் பவுண்டரிகளை லாவகமாக தடுத்து ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சென்னை அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய டெவோன் கான்வே 69 ரன்களும், சிவம் தூபே 42 ரன்களும் எடுத்தனர்.
பஞ்சாப் வீரர் லாகி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து 4 தோல்விகளை எதிர்கொண்ட சென்னை அணி புள்ளி பட்டியலில் 9-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.