திருப்பதி – காட்பாடி ஒற்றை ரயில் பாதையை இருவழித்தடமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், திருப்பதி-பகாலா-காட்பாடி ஒற்றை ரயில் பாதை பிரிவை, இருவழிப் பாதையாக மேம்படுத்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஆயிரத்து 332 கோடி ரூபாய் செலவில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பயன்பெறும் வகையில் புதிய ரயில்வே திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த புதிய ரயில்வே திட்டம் மூலம் 400 கிராமங்களைச் சேர்ந்த 14 லட்சம் மக்கள் பயன்பெறுவர் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.