நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 5வது முறையாக தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸை வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தோனி தலைமையில் விளையாடிய போதும் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி ரன் எடுப்பதில் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட் பறிபோன நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 103 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதையடுத்து 104 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 10.1 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தது. அதிரடியாக விளையாடிய கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 107 ரன்கள் விளாசியது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய CSK அணி, தொடர்ந்து 5 போட்டிகள் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணி பேட்டிங் செய்த போது கொல்கத்தா அணி 61 பந்துகள் ரன் எதுவும் கொடுக்காமல் வீசியுள்ளது. ஐபிஎல் க்ரீன் டாட் பால் முறைப்படி ஒரு பந்துக்கு 500 மரங்கள் நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை அணியால் மட்டுமே 30,500 மரங்கள் நடப்பட உள்ளன.