தெலங்கானாவில் தாய்மாமன் திருமணத்திற்கு சென்ற 2 குழந்தைகள் காருக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தாமரகிடி கிராமத்தை சேர்ந்த ராம்பாபு என்பவரின் திருமணத்திற்கு அவரது சகோதரிகள் குடும்பத்துடன் வந்துள்ளனர். சகோதரிகளின் குழந்தைகள் தாய்மாமனுக்கு சொந்தமான காரில் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென கதவு உள்பக்கமாக பூட்டிக் கொண்டது.
நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகளை காணாமல் உறவினர்கள் தேடி வந்த நிலையில், ராம்பாபுவின் காரில் குழந்தைகள் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக, காரை திறந்து குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.