அமைச்சர் பொன்முடியை கண்டித்து சென்னை சிவானந்த சாலையில் இந்து அன்னையர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களையும் சைவ, வைணவ சமயங்களைப் பற்றியும் கூறிய கருத்து சர்ச்சையானது. அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பொன்முடியை கண்டித்து இந்து அன்னையர் முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகர பொறுப்பாளர் குணசுந்தரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், கடந்த 4 ஆண்டுகளாக, அவுரங்கசீப் ஆட்சியை விட மோசமான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தை வைத்ததற்கு கண்டனம் தெரிவித்த பரமேஸ்வரன், பொன்முடியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.