சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நியோமேக்ஸ் நிறுவனத்தின் 600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம், இரட்டிப்பு பணம் மற்றும் அதிக வட்டி தருவதாகக் கூறி அறிவிப்பு வெளியிட்டது.
அதனை நம்பிய பொதுமக்கள், அந்நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தனர். ஆனால் பணத்தை முறையாகத் திருப்பி வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட நிலையில், புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தது. அதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான 121 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அதன் தற்போதைய மதிப்பு 600 கோடி ரூபாய் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதே வழக்கில், கடந்த 2023ம் ஆண்டு சுமார் 207 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.