சென்னை கொடுங்கையூர் பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் எரியுலையையை அமைக்க அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்ப்பை மீறி எரியுலையை அமைக்கும் சென்னை மாநகராட்சி குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
வடசென்னை என்றாலே அங்கு வசிக்கும் மக்களின் உழைப்பை புறக்கணித்து அங்கிருக்கும் தொழிற்சாலைகள் தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. சென்னையில் அதிகளவு ஆபத்துமிக்க தொழிற்சாலைகள் இயங்கும் பகுதியில் வடசென்னை பகுதி முதன்மையான இடமாகத் திகழ்ந்து வருகிறது.
கெமிக்கல் நிறுவனங்கள், எண்ணெய் கிடங்குகள், உலோக நிறுவனங்கள் என எண்ணிலடங்காத தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் வடசென்னை பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன.
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிலிருந்து வெளியேறும் துர்நாற்றமும், அதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளிலிருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வைத்து வரும் வடசென்னை பகுதி மக்களுக்குப் பேரிடியாக அமைந்திருக்கிறது சென்னை மாநகராட்சியின் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம். கொடுங்கையூர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த மாநகராட்சியின் குப்பைக் கிடங்கில் கிட்டத்தட்ட 15 மண்டலங்களில் சேகரிக்கப்படு குப்பைகள் கொட்டப்படுகின்றன.
குப்பைகளிலிருந்து ஏற்படும் பாதிப்பு ஒருபுறமிருக்க அந்தக் குப்பைகளை எரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சியின் திட்டம் அப்பகுதி மக்களின் உயிருக்கே உலை வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
ஏற்கனவே மணலி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் எரி உலையால் மூச்சுத்திணறல், காச நோய், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நோய்களைச் சந்தித்து வரும் பொதுமக்கள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்களில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் 2 எரி உலைகளை அமைக்க முயற்சிக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிருஷ்ணமூர்த்தி நகர், எழில்நகர், ராஜரத்தினம் நகர், எம் கே பி நகர், சத்தியமூர்த்தி நகர், முல்லை, நகர் எனப் பல்வேறு பகுதிகளில் சுமார் 5 லட்சம் அளவிலான மக்கள் வசித்து வரும் நிலையில், இது போன்ற எரியுலை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் வடசென்னை பகுதி மக்கள் வாழவே தகுதியற்ற இடமாக மாறிவிடும் எனத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
வடசென்னை வளர்ச்சித் திட்டம் எனும் பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிப் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதாகக் கூறும் தமிழக அரசே, அப்பகுதிகளை ஆபத்துமிக்க பகுதியாக மாற்றும் எரியுலை திட்டங்களை அமைக்க முற்படுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னையின் மற்ற பகுதிகளைப் போல வடசென்னை பகுதி மக்களும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.