ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின்போது நாட்டு வெடி வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம் கஞ்ச நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்துச் சிதறின.
இந்தக் கோர விபத்தில் செல்வராஜ், தமிழ்செல்வன், கார்த்திக் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த லோகேஷ் என்பவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையானதுடன், அருகிலிருந்த கார் மற்றும் 2 வீடுகள் சேதமடைந்தன.
கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.