ஜம்மு-காஷ்மீரின் பஹலிகார், சலால் ஆகிய 2 அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளதால், சிந்து நதி கட்டமைப்பில் புதிதாக 6 அணைகளைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
செனாப் நதியில் கட்டப்பட்டுள்ள பஹலிகார், சலால் ஆகிய அணைகளிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கிசன்கங்கா அணையிலிருந்து பாகிஸ்தானுக்குத் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தப்பட்டிருப்பதால் காஷ்மீரின் சாவல்கோட், கிர்தாய், பகல் துல் உட்பட 6 இடங்களில் புதிதாக அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரவி, சட்லஜ் நதிகளில் புதிய அணைகளைக் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றும், அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.