சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அண்ணாமலையார் கோயில் மன்மத தகனம் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 1ஆம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா தொடங்கியது. நாள்தோறும் அண்ணாமலையாருக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இரவு நேரங்களில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் மகிழ மரத்தை 10 முறை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.
அப்போது சுவாமி மற்றும் அம்பாள் மீது பொம்மை பூ கொட்டும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், வசந்த உற்சவத்தின் நிறைவு விழாவில், அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் சபா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆழ்ந்த தியானத்திற்குச் சென்ற அண்ணாமலையார் மீது மன்மதன் பானம் தொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. தியானம் கலைந்ததால் ஆத்திரமடைந்து, மன்மதனைத் தீப்பிழம்பால் அண்ணாமலையார் சுட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.