காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகனுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாத காரணத்தால், பிறந்து 30 நாட்களேயான பெண் குழந்தையை விலைக்கு வாங்கியுள்ளார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அளித்த தகவலின் பேரில் குழந்தை விற்பனை ஏஜெண்டுகள், முறைகேடாக பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர், அதற்கு உடந்தையாக இருந்த நகராட்சி ஊழியர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த கும்பல் இதற்கு முன்னர் குழந்தை விற்பனையில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.