காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த கருட சேவை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பெருமாளுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், பிரம்மோற்சவத்தின் 3ஆம் நாள் நிகழ்ச்சியில் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கருட சேவையின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
தொடர்ந்து, பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் சீர்வரிசைகள் வழங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இதனை அடுத்து, ராஜ வீதிகள் வழியாகப் பெருமாள் வீதி உலா வந்தார். அப்போது, வழிநெடுகிலும் கூடியிருந்த பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.