நாமக்கல் அருகே துரித உணவகத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட நபரை அடித்து கொன்றுவிட்டு தப்பியோடிய தமிழர் தேசம் கட்சி பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் – பரமத்தி சாலையில் போதுப்பட்டி பகுதியில் ஜோதிமலர் என்பவர் தனது மகன் நிஷாவுடன் சேர்ந்து துரித உணவகம் நடத்தி வந்தார். அதே பகுதியில் தள்ளுவண்டி கடை நடத்தி வந்த ஸ்ரீதர் என்பவர் ஜோதிமலரின் துரித உணவகத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட சென்றுள்ளார். அப்போது, உணவகத்தில் உள்ள டம்ளரில் ஸ்ரீதர் மதுவை கலந்து குடித்ததாகவும், இதனை தட்டிக்கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து ஜோதி மலர் தனது மருமகனான தமிழர் தேசம் கட்சியின் நகர தலைவர் மெளலீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த மெளலீஸ்வரனுக்கும், ஸ்ரீதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மெளலீஸ்வரன் பீர் பாட்டில் மற்றும் சிக்கன் ரைஸ் செய்ய பயன்படுத்தப்படும் கரண்டி ஆகியவற்றை கொண்டு ஸ்ரீதரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்பு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீதரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோித்த மருத்தவர்கள் ஸ்ரீதர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.