அரக்கோணத்தில் மாமூல் கேட்டுத் தராத திமுக நிர்வாகி உட்பட 4 பேர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த பாபு 6-வது வார்டு நகரமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவரது தந்தை மணி, பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதி மற்றும் பைனான்ஸ் தொழில் ஆகியவற்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் தந்தையும், மகனும் பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்தபோது, திடீரென உள்ளே நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், பாபுவிடம் மாமூல் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது பாபு மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை தாக்கியதுடன், தடுக்க வந்த மணி மற்றும் விடுதி மேலாளர் உட்பட 3 பேரையும் அந்த கும்பல் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அரக்கோணம் போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.