தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், புரட்சி இயக்கம் நடத்தாமல், ஒரு தேசத்தின் மீது போர் நடத்தாமல், நமக்கென ஒரு சொந்த நாட்டைத் தொடங்க முடியும். வியப்பாக இருக்கிறது அல்லவா? தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தான் அதற்கான வழி காட்டுகிறார் என்றால் இன்னும் வியப்பாக இருக்கிறது அல்லவா? அதென்ன புதிய தேசம்? எப்படி அமைக்க முடியும்? யார் அந்த வழிகாட்டி? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பண்டைய பாரம்பரியமிக்க தேசமான இந்தியாவின் முதலீட்டுச் சூழல் தற்போது நம்பிக்கைக்கு உரியதாக உள்ளதால், அந்நாட்டில் முதலீடு செய்வதாக முன்னணி இந்திய அமெரிக்கத் தொழில்நுட்ப வல்லுனரும், முதலீட்டாளருமான பாலாஜி ஸ்ரீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் முதலீடு செய்வதன் மூலம் பாரதத்தைக் கட்டியெழுப்ப உதவுவதாகத் தெரிவித்த பாலாஜி ஸ்ரீனிவாசன், வலுவான மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவால்தான் உலகத்துக்கு நன்மை என்றும், நாட்டின் வளர்ச்சியில் அதற்கான திறனைக் காண்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஏன் இந்தியாவிலும் இந்தியர்களிடமும் முதலீடு செய்கிறார் என்பது குறித்த பாலாஜி ஸ்ரீனிவாசனின் பதிவுக்குப் பிரதமர் மோடி,உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதை வரவேற்பதாகவும், இந்தியா ஒருபோதும் ஏமாற்றாது என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு மாற்றாக koo என்ற மைக்ரோ பிளாக்கிங் தளத்துக்கு, நேவல் ரவிகாந்துடன் இணைந்து முதலீடு செய்திருந்தார் பாலாஜி ஸ்ரீனிவாசன். X தளத்தில் பாலாஜி ஸ்ரீனிவாசனை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ,
தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த மருத்துவரின் மகனான பாலாஜி ஸ்ரீனிவாசன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் BS, MS மற்றும் PhD பட்டங்களையும், ஸ்டான்போர்டிலிருந்து வேதியியல் பொறியியலில் MS பட்டத்தையும் பெற்றார்.
அமெரிக்கத் தொழில்முனைவோராகவும் முதலீட்டாளருமாக விளங்கும் பாலாஜி ஸ்ரீனிவாசன் கோனஸில் (கவுன்சில்) நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்தார். பிறகு, cryptocurrencyக்கான பங்குசந்தையான Coinbase நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றினார். அதன்பின், உலகப் புகழ் பெற்ற மூலதன நிறுவனமான (Andreessen Horowitz) ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸின் முக்கிய பொது பங்குதாராகவும் இருந்தார்.
2022ம் ஆண்டில், The Network State How To Start a New Country என்ற தலைப்பில் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். நெட்வொர்க் ஸ்டேட் என்பது ஒரு புதிய நாட்டின் அடித்தளத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. நிர்வாகத் துறையில் ஒரு புரட்சிகரமான யோசனையை முன்வைக்கிறது. ஏற்கெனவே உள்ள நாடுகளின் தேசியவாதத்துக்கும் அரசு முறைகளுக்கும் சவால் விடுகிறது. ஆன்லைனில் ஒரு சமூகமாக சேர்ந்து நிதி திரட்டி இறையாண்மை கொண்ட நிறுவனங்களாக மாறும் திட்டத்தை முன்வைக்கிறது. நெட்வொர்க் நாடுகள் என்று அழைக்கப்படும் உலகளாவிய பரந்த தேசத்தை உருவாக்க வழிகாட்டுகிறது.
முதலில் டிஜிட்டல் முறையிலும் பின்னர் நிஜ உலகிலும் ஒரு புதிய நாட்டை எவ்வாறு தொடங்குவது என்பதற்குச் சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, 2024 ஆம் ஆண்டு, நெட்வொர்க் நாடுகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கான பள்ளியைப் பாலாஜி ஸ்ரீனிவாசன் தொடங்கினார். மலேசியாவின் (Johor )ஜோகூரில் உள்ள (Forest City) ஃபாரஸ்ட் சிட்டியில் அமைந்துள்ள இந்தப் பள்ளியில் ஆரம்பத்தில் 150 பேர்கள் மட்டுமே சேர்ந்தனர்.
இந்தப் பள்ளியில் சேர மூன்று முக்கிய தகுதிகள் தேவை. மேற்கத்திய வாழ்வியல் நடைமுறைகளையும் மதிப்புகளையும் பின்பற்ற வேண்டும். Bitcoin அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வ வாரிசு என்று நம்பவேண்டும். உலகில் தற்போதுள்ள நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளை விடவும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பவேண்டும். இவை தான் அந்த தகுதிகள்.
எல்லாம் சரி, நெட்வொர்க் ஸ்டேட் என்ற பள்ளியில் அப்படி என்னதான் இருக்கும்? என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறது ? என்று தானே கேட்கிறீர்கள்? சமீபத்தில், நெட்வொர்க் ஸ்டேட்டில் ஆர்வமுள்ளவர்களுக்கான மூன்று மாத நேரடி திட்டத்தில் கலந்து கொண்ட நிக் பீட்டர்சன் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
எதிர்கால தொழில்நுட்ப தேசம் அமையப்போகும் என்பதைக் காட்டும் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் என்பது உலகின் சமூக-பொருளாதார மற்றும் அரசியலில் ஏற்படப் போகும் தொழில்நுட்ப பரிணாமம் என்று கூறப்படுகிறது.
நெட்வொர்க் ஸ்டேட் ஒரு சமூக வலைப்பின்னல்;ஒரு தார்மீக புதுமை; ஒரு புதிய தேசிய உணர்வு ஆகும். அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனரின் கீழ் கூட்டு நடவடிக்கைக்கான கட்டமைப்பு; ஒரு ஒருங்கிணைந்த கிரிப்டோகரன்சி; ஒரு சமூக ஸ்மார்ட் ஒப்பந்தத்தால் வரையறுக்கப்பட்ட ஒருமித்த அரசு; திரள் நிதியால் உருவாக்கப்பட்ட தனித் தீவுக்கூட்டம்; ஒரு மெய்நிகர் மூலதனம் மற்றும் ஒரு பெரிய மக்கள் தொகை; நிரந்தர வருமானம் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரம் என விரிவடையும் ஒரு மனிதச் சங்கிலித் தொடர்; இந்த புதிய தொழில்நுட்ப தேசத்தின் முதுகெலும்பாக பிளாக்செயின் தொழில்நுட்பங்களும் கிரிப்டோவும் உள்ளன.
இப்போது ஏன் புதிய தொழில்நுட்ப தேசம் தேவை? உலகில் சிறந்த நாடுகள் இல்லையா? என்ற கேள்விக்கு பாலாஜி ஸ்ரீனிவாசன், அமெரிக்கா மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாகவும், சீனா மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, உடைந்து இருப்பதைச் சரிசெய்வதை விட வெற்றுப் பலகையில் புதிதாக எழுதத் தொடங்குவது எளிது என்பது பாலாஜி ஸ்ரீனிவாசனின் கருத்து. இந்த புதிய தேசத்தை உருவாக்குவதற்காகச் சிங்கப்பூர் அருகே தீவு ஒன்றை பாலாஜி ஸ்ரீனிவாசன் வாங்கியுள்ளார். அங்கு நெட்வொர்க் பள்ளி ஒன்றையும் தொடங்கியுள்ளார்.