திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் நாளில் மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 11 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை நியமித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கவும், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தவும் மதுரை அமர்வு ஆணையிட்டது.
அதன்படி, திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், முதல் நாள் விசாரணையை தொடங்கினார்.
திருப்புவனம் ADSP சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நகை தொலைந்து போனது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட CSR மற்றும் FIR ஆவணங்கள், காவல்நிலைய மற்றும் கோயில் சிசிடிவி DVR ஆகியவை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோவை பதிவு செய்த கோயில் பணியாளரான சக்தீஸ்வரன், கோயில் உதவி ஆணையரின் அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
காலை 10.45 மணி மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை சுமார் 11 மணி நேரம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை மேற்கொண்டார்.