வாணியம்பாடி அருகே பட்டப்பகலில் இளைஞரை ஓட ஓட விரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் பெங்களூருவில் கட்டட வேலை செய்து வந்த நிலையில், விடுமுறைக்கு சொந்து ஊர் வந்துள்ளார். நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பியபோது சங்கராபுரம் அருகே 7 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்து தாக்கியுள்ளனர்.
அப்போது, மணிகண்டன் தப்பி சென்ற நிலையில், அசோக்கை கீழே தள்ளி கை மற்றும் கால்களை கட்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் முயற்சியில் மர்ம கும்பல் ஈடுபட்டுள்ளது. அசோக்கின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதைக் கண்ட மர்மகும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அசோக்கை மீட்டு பொதுமக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 5 மாதங்களுக்கு முன்பு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் அசோக்கை கொல்ல முயற்சி நடந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.