திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
அறுபடை வீடுகளில் 2ஆம் படையான வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு துறை பணியாளர்கள், சிறப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குற்றச் சம்பவங்களை தடுக்க திருச்செந்தூர் நகரைச் சுற்றி 200 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் குடமுழுக்கு விழாவிற்காக தீயணைப்பு வீரர்களும், நீச்சல் வீரர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். போக்குவரத்து துறை சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதுடன், திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறநிலையத்துறை ஊழியர்கள், மின்வாரிய பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பல்வேறு துறை பணியாளர்கள் குடமுழக்கு விழாவில் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மேலும், கோயிலின் முக்கிய பிரதான வாசல் அருகே புனரமைப்பு பணிகள் நடைபெறுவதால், உள்ளே செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.