சென்னை எழும்பூரில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்ற டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
டாஸ்மாக் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, ஆட்சிக்கு வரும் முன்பு திமுக வாக்குறுதி அளித்தது.
ஆனால் ஆட்சியமைத்து 4 ஆண்டுகளாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து, டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் பேரணியாகச் சென்றனர்.
அப்போது பேசிய டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் மோகன்ராஜ், திமுக வெற்று வாக்குறுதிகளை அளித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்திய அவர், இல்லையெனில் டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.