திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாக நடந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 10ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. வள்ளி தேவஸ்தான திருமண மண்டபம் மற்றும் சஷ்டி மண்டபங்களில் குண்டம் அமைத்து 8 கால யாகவேள்வியும் நடைபெற்றது.
இதில், 85 ஓதுவார் மூர்த்திகள் கலந்து கொண்டு மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை, தமிழ் வேதபாராயணம் நடத்தினர். இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று காலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோயிலின் 125 அடி உயர ராஜகோபுரம் மற்றும் கோவர்த்தனாம்பிகை விமானம், விநாயகர் விமானம், பசுபதி ஈசுவரர் விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அப்போது, அரோகரா என லட்சக்கணக்கான பக்தர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனை அடுத்து, கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட புனிதநீர், 10 டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை காண பக்தர்கள் வசதிக்காக 27 எல்இடி திரைகள் அமைக்கப்பட்ட நிலையில், கோயில் மேற்புறத்தில் ஆயிரத்து 700 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் பக்தர்களுக்காக உணவுகள் வழங்கப்பட்டன.