கோவையைச் சேர்ந்த இரு 12 வயதான சகோதரிகள் ‘NATIONAL ICON’ விருது பெற்று தமிழகத்திற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.
கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் நரசிம்மன் – லக்ஷ்மி தம்பதியர். இவர்களின் இரு மகள்களான 12 வயதேயான யஷஸ்வினி மற்றும் சம்யுக்தா ஆகியோர், சிறு வயது முதலே யோகா, கராத்தே மற்றும் ஓவியம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்கினர்.
மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர்கள், இதுவரை பல்வேறு விருதுகளையும், பதக்கங்களையும் வாங்கி குவித்துள்ளனர். அத்துடன் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது தாங்கள் வரைந்த ஓவியங்களை விற்பனை செய்த சகோதரிகள், தலா 5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் ரூபாயை NATIONAL DEFENCE FUND-க்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற 2025-ம் ஆண்டுக்கான ICON AWARDS நிகழ்ச்சியில் பல்வேறு சாதனைகள் படைத்த யஷஸ்வினி மற்றும் சம்யுக்தா ஆகிய சகோதரிகளுக்கு, தேசிய பங்களிப்பில் ஈடுபட்டதற்காக ‘NATIONAL ICON’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருதினை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்டோர் வழங்கினர். இந்த விருது தங்களைத் தேசத்திற்காகத் தொடர்ந்து உழைக்க ஊக்குவிப்பதாகச் சகோதரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.