நாகையில் நடைபெற்ற திரைப்பட ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பின்போது ஒருவர் உயிரிழந்த வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, சார்பாட்டா பரம்பரை, தங்கலான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். தற்போது இவர் நடிகர் ஆர்யாவை வைத்து ‘வேட்டுவம்’ என்ற திரௌப்படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற நிலையில், நேற்று நாகை மாவட்டம், விழுந்தமாவடி பகுதியில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், காரில் தாவி ஏறும்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரித்து வரும் நிலையில், அலட்சியமான செயல்பட்டு உயிர்போகக் காரணமாக இருத்தல் என்ற பிரிவின் கீழ் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.