தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவிற்குப் பிறகு நாள்தோறும் விஐபிகள் தரிசனம் செய்து வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் கோயிலுக்கு வருகை தந்தனர்.
பேட்டரி வாகனம் மூலம் கோயிலுக்கு வந்த அமைச்சர் துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி, அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், உற்சவர் சண்முகர் சன்னதியில் அனைவரும் மனமுருகி வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை மற்றும் சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் அமைச்சர் துரைமுருகன் குடும்பத்தினர் சுவாமி தரிசனம் செய்தனர்.