பெருந்தலைவர் காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சு, தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றி விடுவதற்காக திமுக மேற்கொள்ளும் அரசியல் யுக்தியா என்ற கோணத்திலும் விமர்சனம் எழுந்துள்ளது.
காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் எனவும், அவரின் உயிர் பிரியும் தருவாயில் கருணாநிதியின் கையைப் பற்றிக் கொண்டு நாட்டையும், ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறியதாகத் திருச்சி சிவா பேசியிருப்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்த கர்மவீரர் காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகத் திருச்சி சிவா மீது சரமாரியான விமர்சனம் எழத்தொடங்கியுள்ளன.
காமராஜரின் வரலாறு தெரியாமல் திருச்சி சிவா பேசியிருப்பதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையும், காமராஜரை வீழ்த்த திமுக அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று எனக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் மேம்போக்கான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், நேர்மைக்கும் எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த பெருந்தலைவரைக் கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய திமுகவைச் சேர்ந்த தலைவருக்கு வலுவான கண்டனத்தைக் கூட பதிவு செய்யவிடாமல் கூட்டணி தர்மம் தடுக்கிறதா ? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அமைதி காக்கும் நிலையில் அவர்களது கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் திருச்சி சிவாவின் பேச்சுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்
கருணாநிதியைப் புகழ்வதாகக் கருதி காமராஜரை இழிவுபடுத்தியதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திர ராஜன் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.
கட்சியின் மூத்த பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவாவின் இத்தகைய பேச்சைக் கண்டிக்க வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின், காமராஜரின் புகழைப் பாடி கடந்து செல்ல கூறியிருப்பதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
கூட்டணிக் கட்சி எனும் பெயரில் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சியைத் தாமாகவே கழட்டிவிட திமுக முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும், சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் தொண்டர்களே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக திமுகவினர் மத்தியில் அண்மைக் காலமாகவே தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில் இவ்விவகாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டி விட திமுக திட்டமிடுவதாகவும் பேசப்படுகிறது.
திமுகவை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலைக்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டிருப்பதே, காமராஜரை இழிவுபடுத்திப் பேசிய பின்பும் அக்கட்சியின் தலைவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.
கர்மவீரர் காமராஜரை இழிவுபடுத்திய திமுகவுடன் காங்கிரஸ் இன்னமும் தொடர வேண்டுமா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்து கொண்டிருக்க, மறுபுறம் காமராஜரைக் குறித்துப் பேசியதே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றவே என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.