தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல பெண்களுக்கு ஆயுதப்படை காவலர் மதுபோதையில் தொல்லை கொடுப்பதாக, மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜபுரம் கக்கன் தெருவில் வசிக்கும் ஆயுதப்படை காவலரான லெட்சுமணன் என்பவர் அடிக்கடி மதுபோதையில் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் கணவன் இல்லாத பெண்களிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொந்தரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆயுதப்படை காவலர் லெட்சுமணன் ஏற்கனவே தனது 2 மனைவிகளை விவாகரத்து செய்துள்ள நிலையில், தற்போது மேலும் பல பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படை காவலர் லட்சுமணன், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருவதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராமமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.