கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யா வெற்றி பெற்று பண்ருட்டி சட்டமன்றத் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதிமுக மாநில மகளிரணி துணைச் செயலாளராக சத்யா பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது கணவர் பன்னீர் செல்வம், நகர மன்ற தலைவராக இருந்தபோது இருசக்கர வாகன நிறுத்துமிட ஒப்பந்தம் தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஏற்கனவே அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் 2016இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார், சத்யா வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார், அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.