மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
சத்தீஸ்கர் மாநில மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாகவும், இதன் மூலமாக அரசுக்கு 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மீது புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, பூபேஷ் பாகேல் மற்றும் அவரது மகன் சைதன்யா வசிக்கும் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேலை அதிகாரிகள் கைது செய்தனர். சைதன்யாவை அழைத்துச் செல்லும்போது அமலாக்கத்துறை வாகனங்களைத் தொண்டர்கள் தடுத்து நிறுத்த முயன்றதால், காங்கிரஸ் தொண்டர்கள், போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், ராய்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட சைதன்யா பாகேலுக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.