ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத்தலைவர் யார் என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது, குடியரசுத் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஓய்வுபெற்ற பின்பு கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று குடியரசுத் துணைத்தலைவராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் நிலையில் குடியரசுத் துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய தகவல் ஆளுங்கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜெகதீப் தன்கரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரின் ராஜினாமாவைக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய பதவியாகக் கருதப்படும் குடியரசுத் துணைத்தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது
நாட்டின் குடியரசுத் துணைத்தலைவரே மாநிலங்களவைக்கும் தலைவராக பணியாற்றி வரும் நிலையில். அவர் இல்லாத நேரத்தில் மாநிலங்களவையின் துணைத்தலைவர் அவையை நடத்தும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருந்தாலும் ஜெகதீப் தன்கர் தன் உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜினாமா செய்திருப்பதால் புதிய குடியரசுத் துணைத்தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் விதிகளின் படி செப்டம்பர் 19ம் தேதிக்குள் அதாவது தன்கர் ராஜினாமா செய்த 60 நாட்களுக்குள் அதற்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 35 வயதைக் கொண்ட இந்தியக் குடிமகனாகவும், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி உடையவர் யாராக இருந்தாலும் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடலாம்.
குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் முறையாக அறிவித்து அதற்கான பணிகளை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அவைகள் ஒன்றின் பொதுவான ஒருவரைத் தேர்தல் அதிகாரியாகத் தேர்தல் ஆணையம் நியமித்த பின்பு, தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்கள் கோரப்படும். குடியரசு துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்பாளர் ஒருவருக்கு 20 பேர் முன்மொழிபவர்களும் 20 பேர் வழிமொழிபவர்களாகவும் இருக்க வேண்டும்.
மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் இணைந்து வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில், குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.
குடியரசுத் துணைத்தலைவர் தேர்தல் என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நடத்தப்படுகிறது. வாக்காளர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்றாலும் வாக்குச்சீட்டில் இருக்கும் வேட்பாளர்களில் தனது முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு என முன்னுரிமை அடிப்படையில் குறியிட்டு வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்குத் தேர்தல் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெயரை மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிட்ட பின்னர், குடியரசுத் தலைவர் முன்னிலையில் புதிய குடியரசு துணைத்தலைவர் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.