அதிகாரிகளின் ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வேம்பக்கோட்டையில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
வழக்கு விசாரணையின்போது வெடி விபத்தில் தொழிலாளர்கள் பலியாவது குறித்து வேதனை தெரிவித்த பசுமை தீர்ப்பாயம், பட்டாசு ஆலைகள் முறையான உரிமம் பெற்றுள்ளனவா, பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் ஆய்வு செய்ய செல்லும்போது பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதனடிப்படையில் வழக்கில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தையும், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளரையும் சேர்க்க பசுமை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது. அத்துடன் அதிகாரிகள் ஆய்விற்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில் கடந்த ஒரு வாரமாக 15 குழுக்கள் ஆய்வு நடத்தின. 400க்கும் மேற்பட்ட ஆலைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமுறைகளை மீறிய 46 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.