சிறுமி பாலியன் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தேடிவரும் தனிப்படை போலீசாருக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு போலீசார் அவதிக்குள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
குற்றவாளியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு 10க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காவல் வாகனத்தை தள்ளிவிட்டுதான் ஸ்டார்ட் செய்யும் வகையில் உள்ளதால், எப்படி குற்றவாளியை பிடிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், நல்ல நிலையில் உள்ள வாகனங்களை காவல்துறையினரின் பணிக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.