கூகுள் நிறுவனத்தின் அசுர வேக வளர்ச்சி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை மிகப் பெரிய கோடீஸ்வரராக்கியுள்ளது. ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத அதிகாரி ஒருவர், பில்லியனராக மாறியிருப்பது மிகவும் அரிதான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் தங்கமகனான சுந்தர் பிச்சை, மதுரையைப் பூர்விகமாகக் கொண்டவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர். ஐஐடி கரக்பூரில் பி.டெக்.பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் தனது மேலாண்மை படிப்பை முடித்தவர்.
கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை, தனது திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்தார். 2009-ல் Gmail, google map-ஐ மேற்பார்வை செய்து வந்த சுந்தர் பிச்சை, 2015-ல் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இதே பதவியில் தொடரும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1.10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.
அதன்படி சுந்தர் பிச்சையின் சொத்து இந்திய மதிப்பில் 9 ஆயிரத்து 516 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலிலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியலில் சுந்தர் பிச்சை இடம் பிடித்துள்ளார்.
அவரது சொத்து மதிப்பு உயர்வதற்குக் காரணம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்றம் கண்டதுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள், 400 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது. இதன்காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தையும் வழங்கி உள்ளது.
ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வருவாய் அறிவிப்பில் இருந்து தற்போதுதான் வெளியேறியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, இது மிகச்சிறந்த காலாண்டு என்றும், 40வது முறையாக அதைச் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆல்பாபெட்டில் இணைந்து ஆகஸ்ட் உடன் 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கிளவுட், யூடியூப், பிளே போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நம்ப முடியாத வளர்ச்சியை எண்ணிப் பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு ஒரே வரியில் IMPRESSIVE என டெஸ்லா நிறுவன இயக்குநர் எலான் மஸ்க் ரிட்விட் செய்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.