ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாக, கடந்த 12ம் தேதி நடந்து சென்ற 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட
சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சிறுமியை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி இருந்தும் 12 நாட்களாக குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது வீடியோ, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைப் பார்த்த சிறுமி, அந்த நபர்தான் குற்றவாளி என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, அந்த நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.