கொலை வழக்கில் கேரள செவிலியர் நிமிஷாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஏமன் அரசு ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கேரள செவிலியர் நிமிஷா பிரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், பேச்சுவார்த்தையின் பலனாக, நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் முழுமையாக ரத்து செய்துள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் A.P.அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏமன் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அபுபக்கர் முஸ்லியார் தரப்பு, அதேநேரம் இதுதொடர்பாக ஏமன் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அல்லது எழுத்துப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளது.