நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.நகர் அருகே ஐடி ஊழியர் கவின் என்பவர் கடந்த 27ஆம் தேதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த சுர்ஜித் என்பவர் தனது சகோதரியுடன் நெருங்கி பழகி வந்தது பிடிக்காததால் கவினை வெட்டி கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
கவினின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி தூத்துக்குடியில் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கவினின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என தெரிவித்தார்.