குற்றாலத்திற்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததாக அமைச்சர் தெரிவித்த நிலையில், பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என உறுதிமொழிக்குழு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிப்பாகக் காசிவிஸ்வநாதர் கோயில், அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த உறுதிமொழிக் குழுவினர், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் உறுதிமொழி குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன், நிலுவையில் உள்ள 117 உறுதிமொழிகளில் 26 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், குற்றாலத்திற்கு 11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மேம்பாட்டு பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை எனவும் தெரிவித்த அவர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் டங்க் ஸ்லிப் ஆகி மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாகக் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டார்.