இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவுடன் வணிகம் செய்ததற்கான அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து விலகிப் பாகிஸ்தான் பக்கம் ட்ரம்ப் நெருக்கமாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் நீண்டகாலமாகவே, தனது கடற்கரையில் அதிக அளவில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கூறி வருகிறது. பாகிஸ்தானின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்பு 500 மில்லியன் பீப்பாய்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்பார்க்கும் அளவுக்குப் பெரியதாகவோ அல்லது பிரித்தெடுக்கக்கூடியதாகவோ அந்த எண்ணெய் இருப்புகள் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதனாலேயே, இதுவரை அந்த எண்ணெய் இருப்புகளை எடுக்காத பாகிஸ்தான், தனது எரிசக்தி தேவைகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தானுடன் ஒரு புதிய எரிசக்தி ஒப்பந்தத்தை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த எரிசக்தி ஒப்பந்தம் வந்துள்ளது. இருநாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் எண்ணெய் இருப்புகளை வளர்ப்பதில் ஈடுபடும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அதற்கான எரிசக்தி நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருவதாகவும், விரைவில் இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் இருப்புகளை எடுத்து, உலக நாடுகளுக்கு அமெரிக்கா விற்கும் என்றும், அந்த எரிசக்தியை இந்தியா கூட வாங்க வேண்டியிருக்கலாம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யும் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்க வரிவிதிப்புக்கான காலக் கெடு முடிவடைய உள்ள நிலையில், இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். பாகிஸ்தான் உடனான எரிசக்தி மற்றும் வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்கா இந்தியாவை விட்டுப் பாகிஸ்தான் பக்கம் சாய்வதைக் காட்டுகிறது.
முந்தைய அதிபர் ஜோப்பைடன், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்திக்க மறுத்து, அந்நாட்டைக் கொஞ்சம் விலக்கியே வைத்திருந்தார். ஏமாற்றுவது மற்றும் பொய் சொல்வது ஆகிய இரண்டை மட்டுமே பாகிஸ்தான் அமெரிக்காவுக்குத் தந்துள்ளது என்று, 2018 ஆம் ஆண்டில் சொன்ன ட்ரம்ப், இப்போது, பாகிஸ்தான் மீது பாசம் காட்டுகிறார்.
இரண்டாவது முறை அதிபரானதும், கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது முதல் உரையிலேயே, அபே கேட் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவரைக் கைது செய்ய உதவியதற்காகப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் இராணுவத்துக்கான மிக உயர்ந்த அரசு விருதான நிஷான்-இ-இம்தியாஸ் விருது அமெரிக்க ஜெனரல் மைக்கேல் குரில்லாவுக்கு வழங்கப் பட்டுள்ளது. அமெரிக்க-பாகிஸ்தான் இராணுவ உறவுகளை மேம்படுத்துவதிலும், அமைதியை நிலைநாட்டியதிலும் குரில்லாவின் பங்கைப் பாராட்டிய, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, இந்த உயரிய விருதை வழங்கியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு, வெள்ளை மாளிகையில் மதிய விருந்தளித்து ட்ரம்ப் சிறப்பித்தார். பாகிஸ்தானின் இராணுவத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் விருந்தளித்தது இதுவே முதல் முறையாகும்.
கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தான் விமானப்படைத் தலைவர் ஜாகீர் அகமது பாபர் சித்து, பென்டகன், வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் F-16 Block 70 என்ற போர் விமானங்கள், AIM-7 Sparrow ஏவுகணைகள் மற்றும் M142 High Mobility Artillery Rocket சிஸ்டத்தை கொள்முதல் செய்யவும் பாகிஸ்தான் ஆர்வம் காட்டியுள்ளது. பாகிஸ்தானுடன் ட்ரம்ப் நெருங்கிப் பழக, தொடக்கப் புள்ளியாக ஆப்ரேஷன் சிந்தூர் இருந்தது. இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியாக ட்ரம்ப் தன்னிச்சையாக அறிவித்தார். அதை பாகிஸ்தான் ஆமோதித்தது. கூடுதலாக,ட்ரம்ப் குடும்பத்தினர் தொடர்புடைய World Liberty Financial நிறுவனத்துக்குப் பாகிஸ்தான் உதவியது.
2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரைப் பரிந்துரைத்தது. இவைதாம் பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் முழு ஆதரவைக் கொடுப்பதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா- சீனா இருநாடுகளிடமிருந்து பாகிஸ்தான் அதிக ஆதரவை பெறுவது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் என்ன நேரத்தில் என்ன சொல்வார் ? என்ன செய்வார்? என்று கணிக்க முடியாதவராக இருக்கும் ட்ரம்பின் நிர்வாகத்தில் எதுவும் நிரந்தரமானது அல்ல என்று கூறும் அரசியல் வல்லுநர்கள், பாகிஸ்தானுடன் ட்ரம்பின் பாசம் வளருமா? தேயுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.